கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.. நிகழ் கால நடப்புகளில் தனி மனிதனின் உணர்வுகள், தனி மனித இரக்கம் ஆகியவை மிக சுலபத்தில் பிறரின் சுய லாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள படுகிறதென்று நினைக்கும் போதே.
அலுவலகம் முடிந்த பின் 12'ஐ நெருங்கும் முன்னிரவு வேளையில் தேநீர் அருந்தும் பழக்கம் எனக்குள் வாடிக்கை. சென்ற வாரம் வழக்கமாக தேனீர் அருந்தும் கடையில் தேநீர்காக நின்ற பொழுது ஒரு நடுத்தர வயதுள்ள முன் அறிமுகமில்லா மனிதர் அவசரமாக என்னிடம் பணம் கேட்டார். அருகில் உள்ள பேக்கரி'யை காட்டி "Salt bread" வாங்க போவதாக சொன்னார்.
நானும் ஒன்றும் கர்ண பரம்பரை இல்லைதான், ஆனால் ஒரு முன்னிரவின் இந்த கேள்வி எங்கேயோ இருக்கும் பசி படிந்த முகத்தை என் நினைவில் நிழலாடியது. கையில் தேநீர்காக எடுத்திருந்த 20 ரூபாயை கொடுத்தேன், அதிகபட்சம் இந்த உரையாடலும் அதைதொடர்ந்த கொடுக்கலும் ஒரு 15 வினாடிக்கும் குறைவாக நிகழ்ந்து இருந்தது.
அடுத்த 30வது வினாடி எனக்கான சவுக்கடி காத்து இருந்தது. அந்த மனிதர் அதே பேக்கரியில் இருந்து தன் மதுவுக்காக "உப" பொருட்களை வாங்கி கொண்டிருந்தார். நொந்து போனேன். நான் வாங்கிய தேநீர் தொண்டையில் இறங்க மறுத்தது, 20 ரூபாய் ஒன்றும் பெரிய தொகை இல்லைதான் ஆனால் அதைவிட தான் ஏமாற்ற பட்டோம் என்ற எண்ணம் எழுந்த அந்த வினாடி நெஞ்சம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. அவன் சட்டையை பற்றி இரண்டு விளாசு விளாசியிருக்கலாம் அல்லது சினிமா பட கதாநாயகன் போன்று பேசியே திருத்தி இருக்கலாம். அனால் இவை இரண்டும் நிகழ்காலத்தில் நடவாத ஒன்று. குடிக்காக பிறரை ஏய்க்கும் அந்த "நல்ல" உள்ளத்திடம் நள்ளிரவில் ஒரு பஞ்சாயத்து வேண்டுமா என்று ஒதுங்கி கொண்டேன். இந்த சமூகமும் எனக்கு பழக்கிய அதிகபட்ச தற்காப்பு ஆயுதமும் அதுதான்.
"ஒதுங்குதல்" பெரும்பாலான பிரச்சனையான நேரங்களில் குடும்பத்தாரும் இந்த சமூகமும் அறிவுறுத்தும் ஒரு பிரதான ஆயுதம்.
நான் வாசித்த புத்தகங்களும் அவை எனக்கு வழங்கியதாய் எண்ணிய வீரமும், அநியாயத்துக்கு எதிரான போராட்ட உணர்வும் நிகழ்கால வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தத்தில் இருந்து வெகுதூரம் இருப்பதாய் எண்ணி கொண்டேன்.
எந்த புத்தகமும் நடைமுறை எதார்த்தத்தை உறைப்பதில்லை போலும்.
பாரதியை கண்டு நான் பழகிய "ரௌத்ரம்" வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது போல் என்னுள் இன்னும்.
No comments:
Post a Comment